Saturday, September 24, 2016

முதல் காதல் கவிதை...

இன்றும் ஞாபகம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்...
நான் எழுதிய முதல் காதல் கவிதை....

ப்ரஹ்மச்சாரி விநாயகன் கூட 
உன் வலையில் விழுந்து விட்டான் போலும்...
வினை தீர்ப்பான் விநாயகன் என்று 
வணங்க சென்ற விநாயகன் சிலை மேல் 
கற்பக விநாயகர் என்ற பெயர் பலகை...




Sunday, May 08, 2016

அன்னையர் தினம்


எனக்கு மட்டும் ஏனோ கண்ணில் அடிக்கடி தூசி விழும்,
உன் நினைவுகள் எந்நேரமும் நெஞ்சை வருடி செல்லும் ...

என்றாவது நிஜத்தில் தூசி விழுந்தால்,
நீ நெற்றியில் கை வைத்து, விபூதி ஊதிய ஞாபகம்...

யாரோ யாரையோ கண்ணு என்று அழைத்தால்,
இன்னும் திரும்பி பார்க்கும் நான்...

ஊரே தர்த்திரியம் என்று சொல்லும் போது,
வெள்ளி செவ்வாய் மாறாமல் த்ரிழ்டி சுற்றிய நீ...

இறுபது வயது முன்பு நீ கொடுத்த கடைசி முத்தம்,
இன்னும் நெற்றி பொட்டில் ஈரம் மாறாமல்...

கடவுளின் படைப்பில் இப்படி ஒரு அதிசியம்,
அறுபட்ட பின்னும், தொடர்பிலேயே இருக்கும் என் தொப்புள் கொடி...

உடலை மட்டும் உன்னிடம் இருந்து பிரிக்க தெரிந்த இறைவன்,
உயிரை மட்டும் உன்னிடமே விட்டு விடுவது ஏனோ...

முகம் துடைத்த உன் முந்தானை வாசம் தீரவே
இன்னும் மூன்று ஜென்மம் வேண்டுமே ...

உன்னை இரு முறை தான் நினைக்கிறேன்,
மூச்சு இழுக்கும் போது ஒரு முறையும், விடும் போது ஒரு முறையும்...

நித்தம் நித்தம் கொண்டாட வேண்டிய உன்னை
ஒத்தை நாளில் எப்படி சுருக்குவது...
அன்னையர் தினம் கண்டுபிடித்தவன் ஒரு முட்டாள்,
கடைபிடிப்பவன் மடையன்...


Saturday, January 09, 2016

இரும்பு கேட் உம் பச்சை கேட் உம்

கடைக்கு உள்ளே நான்... வெளியே நீ...
கண் சிமிட்டி கேட்பாய்... ஒரு ஸ்ட்ரிப் theoasthalin குடுங்க  
அன்று முதல் உன் பெயர் "theoasthalin" ஆனது...
"theoasthalin...theoasthalin"... கடையில், கோவில் வாசலில், கடை தெருவில்...
கண்ட இடமெல்லாம்... உன்னை கண்ட இடமெல்லாம்... என் தேசிய கீதமானது...
ஒரு நாள் நடு தெருவில், உன் முகம் எனை முறைத்தது...
அந்தி வானம் சிவந்தது போல்...
என் பேரு ஒன்னும் "theoasthalin" இல்ல "திவ்யா"... 
காதில் விழுந்தது திவ்யமாய்.
சொல்லிவிட்டு ஒரு நமட்டு புன்னகை...
அந்தி வானம் நடுவே பூத்த வெள்ளி நிலவாய்...
அன்று உனக்கு பதினான்கு...எனக்கு பதினாறு...

என் வீட்டு இரும்பு gate உம், உன் வீட்டு பச்சை gate உம்... உறவாட தொடங்கியது...
ஒரு குனிந்த தலை என் வீட்டை கடக்கும்...
அது என்னை திரும்பி பார்த்தால், என் பின்னே யாரும் இல்லை...
குனிந்தே சென்றால், எங்கோ யாரோ நிற்பார்கள்...
பச்சை gate மூடும் முன்னே, ஒரு சந்தன தண்டு வெளியே வந்து கையசைக்கும்...
சேட்டை கொஞ்சம் அதிகம் என்றால், என் முதுகில் அடி விழும்
"அந்த சிரிக்கி மவ, நான் நிக்கறது தெரிஞ்சே இப்படி பண்றா"
அக்கா, சித்தி, சி.அம்மா இப்படி யாரோ ஒரு குரல் கேட்கும்...

தேர் திருவிழா கலைக்கட்டும்,
நீ பாவாடை தாவணியில் பவனி வருகையில்..
நீயும் நானும் வடம் பிடித்து இழுத்தால்,
நடராஜர் தேர் நடனம் ஆடும்...
நீ கண்மூடி கடவுளை வணங்குவாய்,
நான் குங்குமம் எடுத்து உன் நெற்றியில் வைப்பேன்,
ஒன்றுமே நடக்காதவளாய் கண் திறப்பாய்,
சிவகாமி அம்மன் புன்னகைப்பாள், தன் கரம் உயர்த்தி ஆசியோடு....
தெய்வீக காதல் அது....

கோவில், கடை, கடைத்தெரு, ஸ்கூல் ground,
நம்மை சந்திக்காத செங்கல் இல்லை...
மார்கழி கோலங்கள் கண்டதை விட,
நம் தெரு நம் காலடி கோலங்கள் கண்டது தான் அதிகம்...
யாருமே எதிர்ப்பு இல்லை,
இருப்பினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை.
இரும்பு கேட் இல் தனியாய் நான்,
பச்சை கேட் இல் நீ ஒரு குழந்தை உடன்...
இப்பொழுது உன் குழந்தை எனக்கு கை அசைக்க....
கை அசைத்து, இதழ் சிரித்து, இதயம் நொறுங்கி, நான்...





Tuesday, October 25, 2011

அன்றைய தீபாவளி... இன்று தீப வலியாய்...















அன்றைய தீபாவளி... இன்று தீப வலியாய்...




விறகு அடுப்பில் கொதித்து முடிந்த வெந்நீர் பாணை...

உச்சந்தலையில் வைக்கப்பட்ட நல்லெண்ணெய்...

அன்று மட்டும் கண் எரிக்காத சீக்காய் பொடி...

தின்று தின்று தீராமலே நிற்கும் பலகார அண்டா...

5 மணிக்கே தயாராகி விட்ட சுழியமும், பணியாரமும்...



சாமி அறையில் எரியும் கற்பூரம் அணையும் முன்,

வெடிக்கப்படும் எங்கள் தெருவின் முதல் சரவெடி...



அரை மணிக்கு ஒரு முறை மாற்றப்படும்,

சொந்தம் முழுதும் வாங்கி கொடுத்த புத்தாடைகள்...



அப்படி என்ன புதையல் வைத்திருப்பாளோ அடுப்படியில்,

இன்றும் அங்கேயே வெந்து கொண்டிருக்கும் அம்மா...



என்றும் போல் இன்றும் அதே பழைய சலவை வேஷ்டியில்,

பட்டாசில் இருந்து propertyயை பாதுகாக்கும் அப்பா...



என் வீட்ல தான் நிறைய பட்டாசு பேப்பர்,

பெருமையுடன் முடியும் தீபாவளி...



இன்று வெறுமையுடன் முடிகிறது...



தீபாவளியை கொண்டாடுவோம்...அதே நினைவுகளோடு...


Saturday, October 22, 2011

இயற்கை இருக்கிறாள்
















 

பால் கொடுத்தவள் மார் தடுத்தாள்
நீ தானே பசி தனித்தாய்...

கை பிடித்தவள் கரம் தவிர்த்தாள்
நீ தானே மனம் தேற்றினாய்...

தோல் கொடுத்தவன் தூரம் சென்றான்
நீ தானே கரை சேர்த்தாய்...
 
உலகமே வெறுத்து நின்ற போது 
நீ தானே அணைத்து கொண்டாய்...
மரம் செடியாய்...
கடல் அலையாய்...
கண்ணீர் மேகமாய்...
மலை அருவியாய்...
அன்று முதல் இன்று வரை
மாறாமல் நீ நின்றாய்...


காத்து கிடக்கிறேன்...
எரிக்க போகும் தீ ற்கும்...
சுமக்க போகும் மண்ணிற்கும்...
கரைக்க போகும் கடலுக்கும்...

Labels:

Tuesday, April 27, 2010

இன்னும் இருக்கிறாய்....
கல்லாய் விழுந்திருந்தால் பொருக்கி இருப்பேன்
மண்ணாய் படிந்திருந்தால் அள்ளி இருப்பேன்
நீயோ நெஞ்சிற்குள் புழுதியாய் படர்ந்தாய்
வெளியேற வழி என்ன வெடித்து சிதறுவதா

"அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"
முதல் சந்திப்பில் ராமாயணம் கற்றேன்
"எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு"
இறுதி சந்திப்பில் கீதை கற்றேன்

"இன்னும் எதற்காக வாழ்கிறாய்"
மனசாட்சியின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதில்
"இறப்பிற்கு பிறகு பிறப்பு உண்டா"
விஞ்ஞானத்தின் கேள்விக்கு நான் மட்டுமே பதில்

Labels:

Saturday, January 17, 2009

அகரம்


அகர முதல எழுத்தெல்லாம் அம்மா

தானே முதற்றே உலகு

- திருக்குறள் கற்ற முதல் நாளில் திருவள்ளுவரை திட்டிய ஞாபகம்


தமிழில் அ - அம்மா என்று படித்துவிட்டு

ஆங்கிலத்தில் A - ஆப்பிள் என்று படித்த போது

வெள்ளையனை திட்டிய ஞாபகம்


சுவரில் ஒரு சித்திரம் காட்டி "கடவுள்" என்று கைக்கூப்பிய போது

உன்னையே திட்டிய ஞாபகம்


தலை நிறைய படித்த போதும்

தோல் மீறி வளர்ந்த பின்பும்

கை நிறைய சம்பாரித்த பின்னும்

கடல் தாண்டி கடந்த பின்னும்

உன் வாயால் "நல்லா சாப்பிடு, உடம்ப பார்த்துக்க"

என்ற ஒரு வரி மட்டுமே

இரண்டு வயது தொடங்கி இருபதுகளை கடந்த பின்னும்


கடவுள் இருப்பானா இல்லையா தெரியவில்லை

இல்லையென்றால், நீயே கடவுள்....

இருந்துவிட்டால், நீ அவனுக்கும் மேல்....





Labels: